அரக்கோணம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி

அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் அம்ரித் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-06 18:03 GMT

அம்ரித் பாரத் திட்டம்

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தெற்கு ரெயில்வே சிக்னல் மற்றும் டெலிகாம் பிளானிங் பிரிவு முதன்மை பொறியாளர் சந்தீப் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி, கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் வளர்மதி, ஐ.என்.எஸ். ராஜாளி கேப்டன் கமோடர் கபில் மேத்தா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சு.ரவி எம்.எல்.ஏ. கல்வெட்டை திறந்து வைத்தார். முன்னதாக அம்ரித் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வளர்மதி, ஐ.என்.எஸ். ராஜாளி கேப்டன் கமோடர் கபில் மேத்தா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

உலக தரத்தில்

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.54.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக ரூ.22 கோடிக்கான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதிய முகப்புடன் கூடிய கட்டிடம் மேம்படுத்துவது, பயணிகள் பகுதி மற்றும் நிர்வாக அலுவலகங்களுக்கு வசதியாக புதிய கட்டிடம் கட்டுவது, ரெயில்வே அலுவலகங்கள், தற்போதைய நிலைய கட்டிடத்தை மாற்றியமைப்பது, நடைமேடையில் இருக்கும் நிலையக் கட்டிடத்தை இடித்து இடமாற்றம் செய்து உள் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துதல், அதிநவீன நடை மேம்பாலம், அனைத்து பிளாட்பாரங்களிலும் பயணிகளுக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்துதல், டிஜிட்டல் தகவல் பலகை, பயணிகள் தங்குமிடம் மற்றும் பொருட்கள் வைப்பு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், நடை பாதைகள், கண்காணிப்பு கேமரா, மேம்படுத்தப்பட்ட வைபை இணைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த திட்டத்தில் மேம்படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் அசோக் கிரிஷ், தாசில்தார் சண்முக சுந்தரம், மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ்.தனசேகரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் விஜயன், மாவட்ட செயலாளர் ரகுநாத், ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, பொது செயலாளர் குணசீலன், ஏ.பி.எம்.சீனிவாசன், ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் மனோகர் பிரபு மற்றும் ரெயில்வே மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் ரூ.16 கோடியில் மறுசீரமைப்பு பணிகளுக்கான கல்வெட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் ெரயில்வேயின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 39 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர், எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, ரெயில்வே துறை தலைமை பொறியாளர் ஹரிபாபு, சென்னை கோட்ட முதல்நிலை பொறியாளர் மயிலேரி, ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ரெயில்வேத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்