பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: கவர்னருக்காக 2 மாதமாக காத்திருக்கிறோம் -அமைச்சர் பேட்டி

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக கவர்னருக்காக 2 மாதமாக காத்திருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-02-22 23:00 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.

பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, மதுரை, கோயம்புத்தூர், சேலம், நெல்லை, தஞ்சை, திருச்சி அரசு ஆஸ்பத்திரிகள் என 10 அரசு ஆஸ்பத்திரிகளின் தர மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்க அந்தந்த டீன் தலைமையில் ஆஸ்பத்திரி மேலாண்மை அலுவலர் உலக வங்கி திட்டத்தின் கீழ் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பின்படி, மருத்துவமனை மேலாண்மையில் பட்ட மேற்படிப்பு முடித்த பட்டதாரிகள் 10 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அமைச்சர். மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

572 பேருக்கு மடிக்கணினி

அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்வி படிக்க தேர்வான மாணவர்கள் இளங்கலை மருத்துவக்கல்வியை பொறுத்தவரை 465 பேரும், இளங்கலை பல் மருத்துவத்தை பொறுத்தவரை 117 பேரும் என ஒட்டுமொத்தமாக 582 மாணவ-மாணவிகள் உள்ளனர். அதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் தவிர (இடைத்தேர்தல் காரணமாக), 572 பேருக்கு இன்று (நேற்று) மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

துணை வேந்தர் நியமனம்

கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு முடிவடைந்து உள்ளது. கடந்த ஜனவரி 4-ந்தேதி, முன்னாள் அரசு சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையிலான தேடுதல் குழு அமைக்கப்பட்டு, கவர்னரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

அந்த குழு அமைத்து 2 மாதம் நிறைவடைய இருக்கிறது. அந்த குழுவுக்கு இனி கவர்னர்தான் வழிகாட்ட வேண்டும். அந்த குழு கூட்டத்தை கவர்னர் அனுமதித்து, அரசின் சார்பில் ஒரு அதிகாரியும் அனுமதிக்கப்படுவார். அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் அந்த குழு தேடுதல் பணியை தொடங்குவார்கள்.

2 மாதமாக காத்திருக்கிறோம்

அந்த குழு 3 பேரை தேர்ந்தெடுத்து அதை கவர்னரிடம் வழங்குவார்கள். கவர்னர் ஒருவரை துணைவேந்தராக நியமிப்பார். அந்த பணிகள் விரைவில் நடைபெறும் என்று கருதுகிறோம். 2 மாதமாக காத்திருக்கிறோம். விரைவில் 3 பேருக்கான அழைப்பாணை கவர்னரிடம் இருந்து வரும். அவர்கள் குழு கூட்டத்தை நடத்துவதற்கு கவர்னர் அனுமதிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இதுகுறித்து கவர்னரின் செயலாளரிடம், நமது துறை செயலாளர் தொடர்ச்சியாக கேட்டு வருகிறார். கவர்னருக்கு பல்வேறு பணிகள் இருப்பதாகவும், விரைவில் அந்த கூட்டம் கூட்ட அனுமதி அளிக்க இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். விதிமுறைகளின்படி நாங்கள் முறையாக செயல்பட நினைக்கிறோம். காலம் தாழ்த்துதல் இனியும் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குனர் எம்.அரவிந்த், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் எஸ்.உமா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், மருத்துவம்-ஊரக நலப்பணிகள் இயக்குனர் வி.பி.ஹரிசுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்