ஊட்டி
ஊட்டி அருகே உள்ள கன்னேரி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக படுக சமுதாய மக்கள் இரு பிரிவாக செயல்பட்டு வந்தனர். மேலும் அந்த கிராமத்துக்கு 2 ஊர் தலைவர்கள் இருந்தனர். அந்த இரு பிரிவையும், கடந்த மாதம் 20-ந் தேதி படுகதேச கட்சி தலைவர் மஞ்சை வி.மோகன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை மூலம் ஒன்றிணைத்தனர். தொடர்ந்து ஒன்றிணைந்த கன்னேரி கிராமத்துக்கு புதிய ஊர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உதவியாக 11 பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கன்னேரி கிராமத்தில் இரு பிரிவுகளை ஒன்றிணைத்த படுக சமுதாய தலைவர்களை கவுரவிக்கும் விழா, ஒற்றுமை விழாவாக நடைபெற்றது. இதற்கு கன்னேரி ஊர் தலைவர் கே.ஆர்.குமார் தலைமை தாங்கினார். படுகதேச கட்சி தலைவர் மஞ்சை வி.மோகன் கலந்துகொண்டு பேசினார். விழாவில் படுக சமுதாய முறைப்படி அனைத்து ஊர்தலைவர்களும் ஒன்றிணைந்து தெய்வங்களாக சமுதாயத்தை காத்து நிற்கும் முன்னோருக்கு நன்றி சொல்லும் பாரம்பரிய கும்மியாட்டத்தை நடத்தினர்.