ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணம்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணத்தை மத்திய கல்வித்துறை இணை மந்திரி தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-31 20:05 GMT

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை விழிப்புணர்வு நடைபயணத்தை மத்திய கல்வித்துறை இணை மந்திரி தொடங்கி வைத்தார்.

நடைபயணம்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. நடைபயணத்தை மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் தொடங்கி வைத்து தானும் ஓடினார். முன்னதாக சர்தார் வல்லபாய் படேலின் பெருமைகளை எடுத்துரைத்து ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசித்தார். மாணவ-மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் சர்தார் வல்லபாய் படேலின் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, மோடி 20 என்ற புத்தகம் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார். இதில் தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புகைப்பட கண்காட்சி

சர்தார் வல்லபாய் படேலின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எம்.பி.யும், திரைப்பட நடிகையுமான ஹேமமாலினி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங், மேலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை விமானநிலைய பயணிகள் பார்வையிட்டனர்.

மணப்பாறை

மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடந்த தேசிய ஒற்றுமை தின ஓட்டப்பந்தயத்தை நகராட்சி தலைவர் கீதா மைக்கேல் ராஜ், மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஓட்டம் மதுரை சாலை வழியாக பெரியார் சிலை வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மாணவர்களுடன் ஆசிரியர்களும் ஓடினர்.

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அணிவகுப்பு

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட மேலாளர் வளாகத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதில் ரெயில்வே கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் திருச்சி கோட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏக்தா திவாஸ் உறுதிமொழியை ஏற்றனர்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நகர் நல அலுவலர் ஷர்மிலி பிரிசில்லா கலாமணி தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்