தொழிலாளர்கள் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்கள் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில், தனசிங், சிலம்பு செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் தொழில் நிறுவனங்களில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றம் செய்யும் சட்டத்திற்கு சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்தும், அந்த சட்ட மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் முதலாளிகளின் நலன் காக்கும் மத்திய அரசின் பின்னால் தமிழக அரசு செல்லக்கூடாது என்றும், கார்ப்பரேட் ஆட்சியாக மாறும் திராவிட மாடல் ஆட்சி, தொழிலாளர்கள் விரோத சட்டங்களை ரத்து செய்திட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். 75 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் பெற்று வந்த மிகை நேர ஊதியம், ஈடுகட்டும் விடுப்பு, பணி நேரத்தில் ஓய்வு போன்ற அடிப்படை உரிமைகளை பறித்து முதலாளிகளிடம் ஒப்படைத்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது, என்று அவர்கள் தெரிவித்தனர்.