தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறையோடு செயல்படுகிறது-மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தமிழக வளர்ச்சியில் மத்திய பா.ஜனதா அரசு அக்கறையோடு செயல்படுகிறது என்றும் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தமிழக வளர்ச்சியில் மத்திய பா.ஜனதா அரசு அக்கறையோடு செயல்படுகிறது என்றும் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
பேட்டி
சேலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாததை கடந்த 8 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்து முடித்துள்ளது. ஒவ்வொரு மக்களின் கனவும் வீடுதான். அதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி, ஒவ்வொரு மக்களின் வீடு கனவை நிறைவேற்றி தந்துள்ளார்.
வாக்குறுதிகள்
வீடுகள் மற்றும் பள்ளிகளில் கழிவறை வசதி, சுகாதாரமான குடிநீர் திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி, சிறு நகரங்களில் விமான நிலையம், கடல்பாசி ஆராய்ச்சி மையம் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு என்று தனி கொள்கை உண்டு. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறினோம். அதன்படி தற்போது அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவதாகவும், கல்விக்கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, மானிய விலையில் பெட்ரோல், டீசல் விலை விற்பனை என கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வளர்ச்சியில்...
தி.மு.க. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே கொலை, பாலியல் துன்புறுத்தல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போன்றவை மோசமாக இருக்கும்.
சேலம், கோவை, ஓசூர் போன்ற நகரங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சேலத்தில் ராணுவ உதிரி பாகங்கள் தொழிற்சாலை அமைய உள்ளது. அதேபோல், ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. எனவே, தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.