மணல் கடத்தல் வழக்கில் ஒன்றியக்குழு உறுப்பினர் கைது

கறம்பக்குடி அருகே மணல் கடத்தல் வழக்கில் ஒன்றியக்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2022-12-22 19:00 GMT

மணல் கடத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருமணஞ்சேரி அருகே மணல் கடத்தி வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்த முயன்றனர். இதைக்கண்ட மணல் கடத்தல்காரர்கள் சரக்கு வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் மணல் கடத்தல் தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளரும், கறம்பக்குடி ஒன்றியக்குழு உறுப்பினருமான தனவந்தனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தனவந்தன் கைது செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கறம்பக்குடி சீனிக்கடைமுக்கம் பகுதியில் நள்ளிரவில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மணல் கடத்தலுக்கும், ஒன்றியக்குழு உறுப்பினருக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் தனவந்தன் கைதை கண்டித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக குரும்பிவயல், அரங்குளவன், மஞ்சுவயல் கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டைக்கு செல்ல முயன்றனர். இதையடுத்து, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசார் குவிப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தால் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்