புதுவாழ்வு திட்டத்தின் கீழ்வறுமை ஒழிப்புக்கு வழங்கிய நிதியில் ரூ.2 கோடி வராக்கடன்:மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தகவல்

புதுவாழ்வு திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்புக்கு வழங்கிய நிதியில் ரூ.2 கோடி வராக்கடனாக உள்ளதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-07-06 18:45 GMT

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா நடேஷ் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் அழைப்பின் பேரில் மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில், வளர்ச்சி பணிகள், செலவினங்கள் தொடர்பான 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத்தலைவர் பேசும்போது, 'மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களால் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மகளிர் திட்டம் மூலம் போதிய அளவில் கடனுதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மகளிர் சுயஉதவிக்குழுவினரை தொழில் முனைவோராக, உற்பத்தியாளர்களாக, சுயதொழில் செய்பவர்களாக உருவாக்க வழிவகை செய்ய வேண்டும்' என்றார்.

ரூ.2 கோடி வராக்கடன்

இதில் மகளிர் திட்டம் சார்பில் பங்கேற்ற அலுவலர்கள் கூறும்போது, 'மைக்ரோ பைனான்ஸ் எனப்படும் நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளால் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பாதிக்கப்படாமல் இருக்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் திட்டம் மூலம் மாவட்டத்தில் 6,101 சுயஉதவிக்குழுக்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த குழுக்களுக்கு வங்கிகள் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களில் வறுமையை ஒழிக்கும் நோக்கில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்பு சங்கங்கள் செயல்பட்டன.

தற்போது புதுவாழ்வு திட்டம் கலைக்கப்பட்டு மகளிர் திட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் புதுவாழ்வு திட்டம் மூலம் வறுமை ஒழிப்புக்கு கடனுதவி வழங்கப்பட்டது. கடன் பெற்றவர்கள் பலரும் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த வகையில் மாவட்டத்தில் சுமார் ரூ.2 கோடி வராக்கடனாக உள்ளது' என்றனர்.

இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்களின் பகுதிகளுக்கான கோரிக்கைகள், தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்