ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைய வேண்டும்: புகழேந்தி பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைய வேண்டும் என்று புகழேந்தி கூறினார்
பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று வந்தார். பின்னர் அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் அ.தி.மு.க.வின் மன்னனாக மகுடம் சூட முடியாது. எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தை பெற்றுக் கொண்டு அவரை தவறாக வழி நடத்தி செல்கின்றனர். அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது என்றால் அதற்கு காரணம் அரசியல் பச்சோந்தி கே.பி.முனுசாமி தான். எடப்பாடி பழனிசாமியின் அரசியலுக்கு முடிவு கட்டும் வேலையினை கே.பி.முனுசாமி செய்து வருகிறார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது தான் தற்போதைய அரசியல் மாற்றத்திற்கு காரணம். அவர் இதை பலமுறை தன்னிடம் கூறி வருத்தப்பட்டார். எடப்பாடி பழனிசாமி சிறைக்கு போவது உறுதி. அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள். அதற்கு காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைவரும் ஒன்றாக இணைந்து கட்சியை வழிநடத்த தமிழகம் முழுவதும் உள்ள அ.தி. மு.க.வினர் ஒன்றிணைய வேண்டும் என்றார்.