அனுமதியற்ற பட்டாசு உற்பத்தியை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை வருமா?
அனுமதியின்றி பட்டாசு உற்பத்தியை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு
பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கும் வரியாக அதிக தொகை கிடைத்து வருகிறது.
ஆனால், சிவகாசி பகுதியில் உரிய அனுமதியின்றியும் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வரி கிடைக்காமல் போகிறது. அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் உண்டாகிறது. அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளால் விபத்து அபாயம் உண்டு என்பதை தெரிந்தும் சில அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு இதில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற சட்ட விரோதங்களை தடுக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை தடுக்க முடியாத நிலை தொடர்கிறது.
இதுகுறித்து பட்டாசு தொழிலில் ஈடுபடுகிறவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
போலி பட்டாசு
பைபாஸ் வைரகுமார்:- அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விலை குறைவாக இருப்பதால் உரிய அனுமதி பெற்று, வரிகள் செலுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போகிறது. பொதுமக்களும் எது உண்மையான பட்டாசு, எது போலியான பட்டாசு என்று தெரியாமல், விலை குறைவாக கிடைக்கும் பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள். இதை தடுக்க முடியாத நிலை தொடர்கிறது. சிவகாசியில் கடந்த 6 மாதங்களில் 100 பட்டாசு ஆலைகளில் பல்வேறு காரணங்களை கூறி அதிகாரிகள் உற்பத்திக்கு தடை விதித்து உள்ளனர்.
உறுதியான நடவடிக்கை
விருதுநகரை சேர்ந்த காளிதாஸ்:-
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பில் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் ஆயிரத்துக்கும் மேல் உள்ள நிலையில் சட்ட விரோதமாக வீடுகளிலும், தகரக்கொட்டைகளிலும் பட்டாசு தயாரிக்கும் தொழில் பரவலாக நடந்து வருகிறது. இதனால் உரிமம் பெற்று பட்டாசு தயாரிப்போருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அனுமதியின்றி தயாரிக்கும் மையங்களில் அவ்வப்போது வெடிவிபத்து ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படுகிறது. சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும், அதை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே தமிழக அரசு சட்ட விரோத பட்டாசு தயாரிப்பை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஆர்.ஆர்.நகரை சேர்ந்த பாலமுருகன்:-
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு அமோகமாக நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் தகவல் தருவது இல்லை
சிவகாசி பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் ஸ்ரீதர்:-
பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எங்கள் துறை சார்பில் அவ்வப்போது ஆய்வுக்கு செல்கிறோம். ஆனால் அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளை தடுக்க போதிய வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இதை யாரும் புகாராக கூறுவது இல்லை. இதனால் தடுக்க முடியாமல் போகிறது. பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி குறித்து ஆரம்ப கட்டத்திலேயே ரகசிய தகவல் கொடுத்தால் இதுபோன்ற விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம். இனி வரும் காலத்தில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் யாரேனும் பட்டாசுகளை தயாரித்தால் இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையங்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் ரகசிய தகவல் கொடுத்து, சட்டவிரோத பட்டாசு தயாரிப்புகளை தடுக்க உதவலாம்.
இவ்வாறு அவர் கூறினார்..
கடும் நடவடிக்கை
துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த்: சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி பட்டாசுகள், திரிகள், குழாய்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது குறித்து ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அனுமதியின்றி பாட்டாசு தயாரித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி பட்டாசுகளை தயாரிக்க கூடாது என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் ஒரு சில இடங்களில் இது போன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்வது தற்போது தெரியவந்துள்ளது. இனி வரும் காலங்களில் நடவடிக்கை மேலும் கடுமையாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலி பட்டாசுகளை கண்டுபிடிப்பது எப்படி?
சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதில் சில நேரங்களில் உரிய அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சிலர் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை கேட்டு வாங்கி செல்வார்கள். பலர் குறைந்த விலைக்கு வரும் பட்டாசுகளை அதிகம் கேட்டு வாங்குகிறார்கள். இதை பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சில வியாபாரிகள் உரிய அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளை அதிகளவில் வாங்கி விற்பனை செய்கிறார்கள். பட்டாசு கடைகளுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் கடையில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை மட்டும் தான் ஆய்வு செய்கிறார்கள். கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பட்டாசுகள் எங்கு தயாரிக்கப்பட்டது? அனுமதி பெற்றதா? பெறாததா? என்ற கேள்வியை எழுப்புவது இல்லை. இதனால் அனுமதி பெற்று தயாரிக்கப்படும் பட்டாசுகளையும், அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளையும் பிரித்து பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் போல் தோற்ற அமைப்புகளுடன் போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது.