அனுமதியின்றி நடந்த காளைவிடும் விழா மாடுகள் முட்டியதில் 50 பேர் காயம்

அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலை கிராமத்தில் அனுமதியின்றி நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 50 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-09-05 17:26 GMT

அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலை கிராமத்தில் அனுமதியின்றி நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 50 பேர் காயமடைந்தனர்.

காளை விடும் விழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள அல்லேரி மலை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடந்தது. அனுமதி இன்றி நடந்த இந்த விழாவில் முதல் பரிசு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 111 அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வாணியம்பாடி, திருப்பத்தூர், பரதராமி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 காளைகள் கொண்டுவரப்பட்டு போட்டியில் பங்கேற்றன.

மிகவும் கரடு முரடான மலை சாலையில் அதிகாலையில் இருந்தே போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளை வாகனங்களில் கொண்டு சென்றனர். விழா காலை 9 மணிக்கு தொடங்கியது போட்டியில் கலந்து கொள்ள வந்த காளைகளை பரிசோதனை செய்வதற்காக கால்நடை மருத்துவர்கள், அனுமதி வழங்கும் வருவாய்த் துறையினர் ஒருவர் கூட விழா நடக்கும் இடத்திற்கு வரவில்லை.

50 பேர் காயம்

விழாவை காண்பதற்காக இளைஞர்கள் அதிக அளவில் கூடினர். காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. காளைகளை இளைஞர்கள் உற்சாகப்படுத்தி அதிவேகமாக ஓட வைத்தனர். அப்போது காளைகளுக்கு இடையூறாக இருந்த இளைஞர்களை முட்டி மோதி தூக்கி வீசி எறிந்தன. இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகம்கூட அமைக்கப்படவில்லை. மலை கிராமவாசிகளே அவர்களுக்கு சிகிச்சை வழங்கியதாக கூறப்படுகிறது.

விழா மாலை 3 மணி வரை நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற 51 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்