பெண் அதிகாரியிடம் கணக்கில் வராத ரூ.17,800 பறிமுதல்
நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கிராம நிர்வாக பெண் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.17,853 பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கிராம நிர்வாக பெண் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.17,853 பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு சோதனை
நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வ சித்ரா (வயது 36). இவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதையடுத்து செல்வ சித்ராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு எக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் போலீசார் நாகர்கோவில் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். உள்ளே நுழைந்தவுடன் அங்குள்ள பணியாளர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை போலீசார் வாங்கி வைத்து கொண்டனர். இந்த சோதனையை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் பதற்றத்திற்குள்ளானார்கள்.
கணக்கில் வராத பணம் பறிமுதல்
பின்னர் போலீசார் அலுவலகம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் நடந்தது. அப்போது கிராம நிர்வாக அதிகாரி செல்வ சித்ரா வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கணக்கில் வராத ரூ.17,853 சிக்கியது. இந்த பணம் குறித்து செல்வ சித்ராவிடம் போலீசார் கேட்ட போது, அந்த தொகைக்கான கணக்கை அவர் சரியாக தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் ரூ.17,853-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனையில் பெண் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.