தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் விஷம் குடித்து தற்கொலை

சிதம்பரம் அருகே தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2024-03-07 08:52 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பட்டறையடி கிராமத்தை சேர்ந்தவர் செம்பரன் (வயது 45). இவருடைய மனைவி சுகன்யா (40). இவர்களுடைய மகள் பிரித்தா(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். செம்பரன் கடந்த ஜனவரி 17-ந்தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது இறப்பால் கடந்த சில நாட்களாக பிரித்தாவும், தாய் சுகன்யாவும் துக்கத்தில் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 3-ந்தேதி இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த விஷத்தை (தலைமுடிக்கு வர்ணம் பூசும் மருந்து) எடுத்து இருவரும் குடித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் பிரித்தா மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி பிரித்தா பரிதாபமாக உயிரிழந்தார். தாய் சுகன்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்