பள்ளிக்கல்வித்துறை சார்பில் உடுமலையில் பள்ளிகளுக்கு இடையேயான குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் ஏராளமான பள்ளிகளை சேர்ந்த 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் விளையாடினார்கள்.அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆர்.வி.ஜி. பள்ளியை வீழ்த்தி சீனிவாச பள்ளி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாந்தி பள்ளியை வீழ்த்தி உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆர்.ஜி.எம். பள்ளியை வீழ்த்தி சீனிவாச பள்ளி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு சகமாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.