புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று உடுமலை பகுதி பெருமாள்கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி வேங்கடேச பெருமாள்
உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா நடைபெற்றது.விழாவை யொட்டி வேங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் உள்ளிட்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர். மேலும் இன்று முதல் நவராத்திரி விழாவும் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
ஏழுமலையான் கோவில்
இதே போன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு முதலே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதிக்கு வந்தனர்.பின்னர் பக்தி பாடல்களை செல்போன்களில் ஒலிக்க செய்தும் கோவிந்தா கோஷம் எழுப்பியவாரும் மலை ஏறிச்சென்று ஏழுமலையானை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து மாலை உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும் உடுமலை வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
நவநீத கிருஷ்ணன் கோவில்
உடுமலை பெரியகடை வீதியில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோவில், நெல்லுக் கடை வீதியில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழாவை யொட்டி உடுமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
குடிமங்கலம்
பூளவாடியில் மிகவும் புகழ்பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பூஜைகள், காலை 7 மணிக்கு கிணற்றடி பூஜை, தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும் காலை 8 மணிக்கு அலங்கார பூஜை தீபா ராதனையும் மதியம் 1 மணிக்கு சங்கு சாதித்து பெருமாளுக்கு அமுது படைத்து விரதம் விடுதல் மற்றும் மதியஉணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதேபோல் மெட்ராத்தி கிராமம் இச்சிப்பட்டி வீரமாட்சி அம்மன், மதுரைவீரன், கன்னிமார் கருப்பாராயன் கோவிலில்அமாவாசை பூஜைகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.