உதயநிதி ஸ்டாலினின் சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் தேவை; அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

உதயநிதி ஸ்டாலினின் சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் தேவை என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2022-12-12 20:13 GMT

கட்சிக்கும், தமிழகத்திற்கும் அவசியம் தேவை

பெரம்பலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சிலர் கேட்பது குறித்து கேட்கிறீர்கள். உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சி வெற்றிக்கு பாடுபட்டார். அவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

அந்த 2 தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக் காட்டினார். அவரது சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் அவசியம் தேவை.

மாணவர் சேர்க்கை

பெரம்பலூர் முதல் அரியலூர் வரை உள்ள நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்ததும் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படும்.தமிழ்நாடு முழுவதும், 69 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் அமைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கடந்த மே மாதம் 12-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்