நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்...! அசுர வளர்ச்சி கொண்ட அரசியல் பயணம்...!

குறுகிய காலத்தில் அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதை அறிந்து கட்சியினர் வரவேற்று வருகின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Update: 2022-12-13 11:05 GMT

சென்னை:

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்.பல தமிழ் சினிமாக்களிலும் நடித்து பிரபலமானவர்.

கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

கட்சியிலும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சி வளர்ச்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு அமைச்சர்களும், கட்சியின் முன்னணி தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாக்களில் பேசிய சில அமைச்சர்கள், 'உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தினர். இதுதவிர பல மாவட்டங்களில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஏற்கனவே தொகுதியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டால் தமிழக மக்கள் அனைவருக்கும் சேவையாற்றுவார் என்று சில அமைச்சர்கள் மற்றும் தி.மு.க.வினரும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்ற உறுதியான தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க கவர்னருக்கு பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பதவியேற்பு விழா சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில். டிசம்பர் 14, 2022 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும்" என கூறப்பட்டுள்ளது.

அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அந்த வகையில் தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டு புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இணைகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதால் அது 35 ஆக உயரும்.

இந்தநிலையில் அவருக்கு தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் அமைச்சர் அறையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அங்குள்ள 2-வது தளத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபாணி அறைகளுக்கு அருகே அறை தயார் செய்யப்பட்டு வருகிறது.

அந்த இடத்தில் ஏற்கனவே சிறப்பு திட்ட செயலாக்க துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு 2-ம் தளத்தில் இருந்த டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லி பிரதிநிதிக்கு 10-வது நுழைவு வாயில் அருகே உள்ள அறை ஒதுக்கப்படுகிறது. தற்போது அந்த அறையை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படும் அறையை கடந்த 2 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து தயார் செய்து வருகின்றனர். இதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளது.

இரவு, பகலாக இந்த பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. அவரது அறைக்கு வெளியே தொங்கவிடப்படும் பெயர்ப்பலகையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது.

அதன்படி அமைச்சர் ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடமும், அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றப்பட்டது.

இதன் பிறகு 2-வது முறையாக அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படுகிறது.


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி 1957ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு 10 ஆண்டுகள் கழித்து அமைச்சர் பதவி கிடைத்தது.

அடுத்து அவரின் மகனும், தற்போதைய முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு 17 ஆண்டுகள் கழித்து அமைச்சர் பதவி கிடைத்தது.

ஆனால் அவரின் மகனும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏமான உதயநிதி ஸ்டாலினுக்கு 19 மாதங்களில் அமைச்சர் பதவி கிடைக்கவுள்ளது. இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு அரசியலில் தடம் பதித்த உதயநிதி ஸ்டாலின், 2019ம் ஆண்டு ஜூலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

குறுகிய காலத்தில் அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதை அறிந்து கட்சியினர் வரவேற்று வருகின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் சென்னை லயோலா கல்லூரியில் பி.காம். படித்தவர். இவரது மனைவி பெயர் கிருத்திகா. இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

இன்பநிதி தற்போது வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி 45 வயதை தொட்டிருக்கும் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் திரையுலக தயாரிப்பாளராக பொதுவெளியில் தோன்றினார்.

'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

'குருவி', 'சிவா மனசுல சக்தி' உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர். 2009-ம் ஆண்டு ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

2012-ல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் மூலம் உதயநிதி கதாநாயகனாக அறிமுகமானார். 'இது கதிர்வேலன் காதல்', 'மனிதன்', 'நண்பேன்டா', 'நெஞ்சுக்கு நீதி', 'கலக தலைவன்', 'மாமன்னன்' என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.

தி.மு.க.வின் செயல் தலைவராக 2017-ல் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது வெள்ளக்கோவில் சாமிநாதன் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் குறுகிய காலமே இந்த பதவியில் இருந்த நிலையில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உதயநிதி தீவிர அரசியலில் இறங்கினார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். இந்த சமயத்தில் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டது.

2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்காக தீவிர பிரசாரம் செய்தார். தேர்தல் சமயத்தில் கருணாநிதியைப் போல் அடுக்கு மொழியில் பிரசாரம், அனல் கக்கும் பொதுக்கூட்ட பேச்சுக்கள் என தி.மு.க.வில் இன்று யாரும் செய்ய முடியாத நிலையில் மாறி வரும் தலைமுறைகளுக்கு ஏற்ப உதயநிதி தனது பிரசாரத்தை தனித்துவமான பாணியில் மேற்கொண்டார்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அவரது ஹை லைட்டே 'செங்கல் பிரசாரம்' தான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு சரி, ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. இதோ அடிக்கல் நாட்டிய அந்த செங்கல்லை எடுத்து வந்திருக்கிறேன் என்று ஒரு செங்கல்லை கையில் ஏந்தி பிரசாரத்தில் காண்பித்தார்.

உதயநிதியின் இந்த பிரசாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அப்போது இந்த பிரசாரம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. சமூக வலை தளங்களில் டிரெண்டானது.

தேர்தல் நேரத்தில் உதயநிதி தங்கை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த போது, தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு வாருங்கள் என்று தனது வீட்டின் முகவரியை தெரிவித்து வருமான வரித்துறையை வீட்டுக்கு அழைத்ததெல்லாம் பிரசாரத்தின் உச்சம்.

இந்த 2021 தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி 93,285 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

சட்டசபையிலும் தனக்கே உரித்தான பாணியில் கலகலப்பை உருவாக்கி நகைச்சுவையாக பேசி எதிர்க்கட்சியினரையும் சிரிக்க வைத்தார். தனது தொகுதியிலும் தெரு தெருவாக நடந்து சென்று மக்கள் குறை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வந்தார்.

இப்படியாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். அரசியலில் தீவிரமாக இருந்தாலும் திரைத்துறையிலும் அவர் முழு கவனம் செலுத்தி வந்தார். 'விக்ரம்', 'லவ் டுடே', 'கட்டா குஸ்தி" உள்ளிட்ட ஏராளமான படங்களை வாங்கி வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலில் 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவருக்கு அரசியலில் முக்கியத்துவம் அதிகமானது. தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள். உதயநிதியின் மக்கள் பணி தமிழகம் முழுவதும் சென்றடைய அமைச்சர் பதவி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

தமிழக அமைச்சரவையில் மதிவேந்தன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் 45 வயதுக்கு குறைவான இளம் வயது அமைச்சர்களாக உள்ளனர். அந்த வரிசையில் இப்போது உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்