மாணவிக்கு பிரத்யேக சைக்கிள் வழங்கி ஊக்குவித்த உதயநிதி ஸ்டாலின்...!

மாநில & தேசிய அளவிலான சைக்கிள் போட்டிகளில் சாதித்து வரும் ஷா.தபித்தாவிற்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊக்குவித்தார்.

Update: 2023-05-22 09:06 GMT

சென்னை,

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில், கோவை மாவட்டத்தை சேர்ந்த சைக்கிள் வீராங்கனை ஷா. தபித்தாவுக்கு போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவைமைக்கப்பட்ட ரூ. 13.99 லட்சம் மதிப்பிலான சைக்கிளை வழங்கினார்.

பயிற்சிக்காக பிரத்யேக சைக்கிள் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தநிலையில்,கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உதயநிதி ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் & உபகரணங்களை வழங்கி ஊக்குவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

மாநில & தேசிய அளவிலான மிதிவண்டிப் போட்டிகளில் சாதித்து வரும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தங்கை ஷா.தபித்தா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருவதால் தனது பயிற்சிக்காக பிரத்யேக மிதிவண்டி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அவரது பயிற்சிக்கு துணை நிற்கும் விதமாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் & உபகரணங்களை வழங்கினோம். தங்கையின் கனவுகள் வெல்லட்டும் என பதிவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் ஷா. தபித்தா சைக்கிளிங் வீராங்கனை ஆவார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

ஜனவரி 2023ம் வருடம் மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக்கில் 07.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெற்ற 27வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்