மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள்
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் வரலாற்றில் இது முக்கியமான நாளாகும். கர்நாடகா மாநிலம் மைசூரில் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுப் பிரிவில் பல ஆண்டுகளாக இருந்த தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளை சென்னைக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது.
இந்த மைப்படிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு தொடர் முயற்சியின் காரணமாக மைப்படிகள் தற்போது இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
13 ஆயிரம் கல்வெட்டுகள்
இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுகள்தான் மிக அதிகம். இப்போது 24 ஆயிரம் கல்வெட்டு படிகள் மைசூரில் இருக்கின்றன. அவற்றில் 13 ஆயிரம் கல்வெட்டுகளுக்கான மைப்படிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
1887-ம் ஆண்டிலிருந்து 1942-ம் ஆண்டுவரை இருக்கக்கூடிய இந்த மைப்படிகள் 'பார்கோட்' மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மைப்படிக்கும் 'டிரான்ஸ்கிரிப்ட்' என்ற எழுத்துப்படிகளும் அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கல்வெட்டுகளும் மிக விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இது முதல்-அமைச்சர் எடுத்துள்ள முயற்சிகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வெற்றியாகும்.
மீட்டெடுக்க ஆர்வம்
1876-ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதன்முறையாக ஆய்வு மேற்கொண்டவர், அங்கு கிடைத்த பொருட்களை ஜெர்மனிக்கு கொண்டு சென்றார். அந்தப் பொருள்கள் இப்போது பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகு 1903-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வில் கிடைத்த பொருட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டில் இருக்கும் இதுபோன்ற பொருள்களை மீட்டெடுப்பதில் அரசு தொடர்ச்சியான ஆர்வம் காட்டி வருகிறது.
உதவி செய்ய தயார்
இங்கே வந்திருக்கும் மைப்படிகளையும், இனி வரவுள்ள மீதிமைப்படிகளையும் உரிய முறையில் வைத்து ஆய்வுக்கு உட்படுத்துவதில் எந்தவிதமான உதவி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
மைப்படிகளை இந்திய தொல்லியல் துறை ஒன்றாக இணைத்து மிகச்சரியான அளவில் வரிசைப்படுத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆலயத்தின் அருகில் உள்ள அந்தத் துறையின் அலுவலகத்தில் மைப்படிகள் வைக்கப்பட்டுள்ளன.
கீழடி அகழ்வாய்வு
கீழடியில் முழுமையாக அகழ்வாய்வு முடிந்திருக்கிறது. அடுத்தகட்டமாக என்னென்ன பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்தப் போகிறோம்? அந்தப் பொருட்கள் குறித்து என்னென்ன குறிப்புரைகள் இடம் பெறவேண்டும்? என்பதெல்லாம் குறித்து நாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு, ஆலோசகர்களையும் நியமித்திருக்கிறோம்.
இந்தப் பணிகளை இன்னும் ஓரிரு மாதங்களில் முடிப்பதற்காக நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அந்தப் பணிகள் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் அந்த அரங்கத்தை திறந்து வைப்பார்.
புதிய வெளிச்சம்
கடல் கடந்து செய்யப்படும் ஆராய்ச்சியில் கொற்கையில் முதற்கட்ட ஆய்வுகளை நாங்கள் முடித்திருக்கிறோம். இப்போது மீண்டும் இந்த டிசம்பரில் 2-ம் கட்ட ஆய்வுகள் தொடங்க இருக்கின்றன. கொற்கையை தொடர்ந்து அழகன்குளத்தில் செய்யலாம் என்றும் திட்டமிட்டுள்ளோம். முசிறி பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.
இதுவரை தென்னிந்திய கல்வெட்டுகள் 1919-ம் ஆண்டு வரை வெளி வந்திருக்கிறது. அதற்கு பிறகு உள்ள கல்வெட்டுகள் வந்தால், இது புதிய வரலாற்றினுடைய பல பகுதிகளுக்கு புதிய வெளிச்சத்தை பாய்ச்சும்.
இவ்வாறு அவர் கூறினார்.