2 வாலிபர்களுக்கு சிறை தண்டனை

கும்பகோணத்தில், லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-11-08 20:52 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணத்தில், லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார். லாரி டிரைவரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வந்து இறக்கி விட்டு மார்க்கெட் அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த கும்பகோணம் மாணிக்கநாச்சியார் கோவில் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண்(வயது 19), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் தேவன்(25) ஆகியோர் வீரக்குமார் ஓட்டி வந்த லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி லாரிக்குள் தூங்கிக் கொண்டிருந்த வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வீரக்குமார் வைத்திருந்த ரூ.1000-ஐ பறித்து சென்று விட்டனா்.

சிறை தண்டனை

இந்த தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் வீரக்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட அருண் மற்றும் தேவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட அருணுக்கு 3 வருடம் 5 மாதம் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் உடந்தையாக இருந்த தேவனுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்