அஞ்சலி செலுத்த இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது

மருதுபாண்டியர், முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் அஞ்சலி செலுத்த இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது என்று கலெக்டர் கூறினார்.

Update: 2023-10-12 18:45 GMT

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூரில் வருகிற 24-ந் தேதி மருதுபாண்டியர்களின் நினைவு தின விழாவும், 27-ந்தேதி காளையார்கோவிலில் நினைவு தின விழாவும் மற்றும் 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்வுகளின் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் குறித்த சமூகதலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அரசு துறை அலுவலர்கள், சமுதாய அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அனுமதியில்லை

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மருதுபாண்டியர்களின் நினைவு நாள் நிகழ்வில் அமைச்சர்கள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். 27-ந் தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர்களின் நினைவு அனுசரிப்பு மற்றும் 30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை ஆகியவை நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. சொந்த நான்கு சக்கர வாகனங்களில் செல்லலாம். நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் துணை சூப்பிரண்டுகளிடம் உரிய தகவல்களை கொடுத்து அரசு பஸ்களில் செல்லலாம். மேலும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்களின் விவரங்களை அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட துணை சூப்பிரண்டுகளிடம் கொடுத்து அனுமதி பெறவேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

வாகனங்களின் மேற்கூரையில் பயணம் மேற்கொள்ளக்கூடாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டிச்செல்லவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. போக்குவரத்து வழித்தடங்களில் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. நடைப்பயணமாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யக்கூடாது. தனிநபர் வீடுகள் மற்றும் காம்பவுண்டுகளில் சம்பந்தப்பட்ட நபரின் உரிய அனுமதி பெற்ற பின்னரே விளம்பரம் செய்யலாம். அனுமதிக்கப்பட்ட வழிப்பாதைகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து சமுதாய அமைப்பினரும் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்