வியாபாரிகளை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது

வியாபாரிகளை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது

Update: 2022-06-10 20:01 GMT

தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தையில் பணம் கொடுக்க மறுத்ததால் 3 வியாபாரிகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் குடிபோதையில் கடைக்குள் புகுந்து பணத்தையும் கொள்ளையடித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் ரகளை

தஞ்சை கரந்தை பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கடைவீதியில் அரிவாளை காட்டி அந்த வழியாக சென்ற பொதுமக்களை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் பணம் கொடுக்க மறுத்த சிலரை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களாலும் தாக்கி உள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் போதையில் இருந்த ஆசாமிகள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு மருந்து கடைக்கு சென்று பணம் கேட்டி மிரட்டி உள்ளனர். அதற்கு அங்கு வேலை பார்த்த ஊழியர் முருகானந்தம் என்பவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் முருகானந்தத்தை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அந்த மர்ம நபர்கள் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2,500-ஐ கொள்ளையடித்தனர்.

பின்னர் அவர்கள் அருகில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் செந்தில்வேல் என்பவரின் கடைக்கு சென்று அங்கிருந்த செந்தில்வேலிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர் அதற்கு செந்தில்வேல் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவரையும் 2 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். இதில் அவரும் படுகாயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அந்த பகுதியில் உள்ள மற்றொரு கடைக்காரரையும் அவர்கள் அரிவாளால் லேசாக வெட்டி உள்ளனர்.

இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட கரந்தை ராஜாராமன் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஹரிகரன்(வயது 21), கரந்தை பூக்குளம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் தினேஷ்(19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கை முறிந்தது

முன்னதாக போலீசாரை பார்த்ததும் அரிவாளுடன் அவர்கள் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்றபோது ஹரிகரன் தவறி கீழே விழுந்ததில் அவரது கை எலும்பு முறிந்தது. உடனடியாக அவருக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்