தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா:வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது

Update: 2023-07-17 18:45 GMT

பனிமய மாதா பேராலயம்

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு 16-வது தங்கத்தேர் பவனி நடக்கிறது.

கொடியேற்றம்

இந்த ஆண்டு பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைமுன்னிட்டு அன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருைண ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றது.

பிஷப்கள்

இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா என்பதால் விழாவில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்கின்றனர். அதன்படி திருவிழாவின் 2-ம் நாள் பாளையங்கோட்டை முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ், 3-ம் நாள் பாளையங்கோட்டை தற்போதைய பிஷப் அந்தோணிசாமி, 4-ம் நாள் சிவகங்கை பிஷப் சூசை மாணிக்கம், 5-ம் நாள் மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி, 6-ம் நாள் தூத்துக்குடி முன்ளாள் பிஷப் இவோன் அம்புரோஸ், 7-ம் நாள் திண்டுக்கல் பிஷப் பால்சாமி, 8-ம் நாள் திருச்சி பிஷப் ஆரோக்கியராஜ், 9-ம் நாள் இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னாண்டோ, 10-ம் நாள் கோவா உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி, 11-ம் நாள் கோவை பிஷப் தாமஸ் ஆக்குவினாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தங்கத்தேர் பவனி

5-ந் நாள் விழாவான வருகிற 30-ந் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்டு 4-ந்் தேதி 10-ம் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும்.

5-ந் தேதி காலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு தங்கத்தேர் நன்றி திருப்பலி, மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவுத் திருப்பலி நடக்கின்றது.

ஏற்பாடுகள் தீவிரம்

தங்கக்தேர் திருவிழாவை முன்னிட்டு 53 அடி உயரம் கொண்ட பாரம்பரிய தங்கத்தேர் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்தர தங்கத்தாள் ஒட்டும் பணியில் 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பேராலயத்தில் வீற்றிருக்கும் அன்னையின் திருச்சொரூபம் தங்க முலாம் பூசப்பட்டு வருகிறது. திருப்பலிப்பீடம், பின்னணி அலங்கார வேலைகள், உயர் சுவர் வர்ணம் பூசுதல், உட்புற ஜோடனைகள் மற்றும் வெளிப்புற மின் அலங்கார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மேலும் பக்தி ஆராதனை பாடல் பயிற்சிகளும் நடந்து வருகின்றன.

வெளியூர் திருப்பயணிகள் தங்குமிட ஏற்பாடுகள், குடிநீர், சுகாதார வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பேராலய அதிபர் பங்குதந்தை குமார்ராஜா தலைமையில், உதவி பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ், பேராலய மேய்ப்புப்பணி குழுவினர், பக்தசபையினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்