அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்

எம்மேகவுண்டன்பாளையத்தில் மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராகியுள்ளன. ஒரு ஜோடிக்கு ரூ.50 விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-01-05 18:45 GMT

நெகமம்

எம்மேகவுண்டன்பாளையத்தில் மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராகியுள்ளன. ஒரு ஜோடிக்கு ரூ.50 விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மஞ்சள் சாகுபடி

கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் சாகுபடி அதிகளவில் இருந்து வந்தது. அன்றைய காலகட்டத்தில் மஞ்சள் குலைகளுக்கு இடையே மிளகாய், துவரை, ஆமணக்கு, வாழைகளை ஊடுபயிராக சாகுபடி செய்து வந்தனர். இந்த ஊடுபயிரில் மிளகாய், துவரை, ஆமணக்கு, வாழை என முறையே அறுவடை செய்யப்பட்டது. மஞ்சளின் ஓராண்டு சாகுபடிக்கு நடுவே 4 ஊடுபயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் பார்த்து வந்தனர். இதற்கு பாசன கிணறுகளில் போதிய நீர் இருந்ததும், பருவமழைகள் தவறாமல் பெய்து வந்ததும்தான் முக்கிய காரணமாக இருந்து வந்தது.

இது தவிர ஓராண்டு சாகுபடியான மஞ்சள் கிழங்குகள் ஆண்டுக்கு ஒருமுறை தோண்டி எடுக்கப்பட்டது. இதை வேக வைக்க ஒருமாத காலம் ஆகும். வேக வைத்த மஞ்சளை கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள். இதனால் மஞ்சள் சாகுபடி விவசாயிகளுக்கு திருப்திகரமாக இருந்தது.

ஊடுபயிர்

நாளடைவில் போதிய மழை இல்லாததால், பாசன நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலும் குறுகிய கால பயிர் சாகுபடியை அதிகம் விரும்பியதோடு, 3 முதல் 4 மாதங்களில் வருமானம் கிடைக்கும் சாகுபடிகளில் ஆர்வம் காட்ட தொடங்கினர். இதனால் நெகமம் பகுதியில் உள்ள விவசாயிகள் தென்னைக்கு அடுத்ததாக தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், புடலங்காய், பாகற்காய், அரசாணிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, பூசணிக்காய், பொறியல் தட்டை சாகுபடிக்கு மாறிவிட்டனர். இதனால் மஞ்சள் சாகுபடி வெகுவாக மறைந்து வருகிறது. இருப்பினும் பாரம்பரியத்தை மறக்காத ஒரு சில விவசாயிகள் ஒரு ஏக்கர் அல்லது 2 ஏக்கருக்கு குறைவான பரப்பளவில் மஞ்சளை தனிப்பயிராக சாகுபடி செய்யாமல், தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக சாகுபடி செய்து உள்ளனர்.

விளைச்சல் அதிகரிப்பு

இதன் ஒரு பகுதியாக நெகமம் அருகே உள்ள எம்மேகவுண்டன்பாளையத்தில் ஒரு ஏக்கருக்கு மேல் தென்னைக்கு ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது செழித்து வளர்ந்துள்ளதோடு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொங்கல் பண்டிகையின்போது தோட்டம்(பட்டிகளில்), வீடு மற்றும் கோவில்களில் நடக்கும் பொங்கல் வழிபாட்டின்போது வாழை இலையில் பொங்கல், கரும்பு, மஞ்சள் குலை, காய்-கனிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபடுவார்கள். இதில் மஞ்சள் குலை முக்கிய பங்கு ஆகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் குலை அறுவடை பணி விரைவில் தொடங்க உள்ளது.

ஜோடி ரூ.50

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இந்த பகுதியில் ஒட்டுமொத்த மஞ்சள் குலைகளையும் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, அதை தொழிலாளர்கள் மூலம் பிடுங்கி பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், உடுமலை, சுந்தராபுரம், பல்லடம், சூலூர், நெகமம், சோமனூர், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவார்கள்.

கடந்த ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்