விவாகரத்தான பெண்ணை காரில் கடத்திச்சென்று தவறாக நடக்க முயற்சி?

விவாகரத்தான பெண்ணை காரில் கடத்திச்சென்று தவறாக நடக்க முயற்சி?

Update: 2022-08-19 19:54 GMT

தஞ்சையில், விவாகரத்தான பெண்ணை காரில் கடத்திச்சென்று தவறாக நடக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவாகரத்தான பெண்

தஞ்சையை சேர்ந்த விவாகரத்தான 28 வயது பெண் ஒருவர், மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்து இருந்தார். அதே திருமண தகவல் மையத்தில் கும்பகோணத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் பதிவு செய்து இருந்தார். இவர் இணையதளத்தில் தனக்கு தகுந்த வரன் இருக்கிறதா? என பார்த்தார்.

அப்போது மறுமணம் செய்து கொள்வதற்காக பதிவு செய்த பெண்ணின் முகவரி கிடைத்தது. மேலும் அதில் இருந்த செல்போன் எண் மூலம் கும்பகோணத்தை சேர்ந்தவர் அந்த பெண்ணிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த பெண்ணிடம், உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டியது இருப்பதால் தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வருமாறு சொல்லியுள்ளார்.

காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி?

இதனையடுத்து அந்த பெண்ணும் அந்த ஓட்டலுக்கு வந்துள்ளார். அங்கு 3 பேர் இருந்துள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கும், அந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண்ணை 3 பேரும் காரில் அழைத்து சென்றனர். காரில் சென்றபோது மதுபானம் கலந்த குளிர்பானத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்து, அவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.

பெண்ணை மீட்டனர்

இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். கார் வெண்ணாற்றங்கரை அருகே சென்றபோது அந்த பெண்ணின் வாயில் துணியை திணிக்க அந்த நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து சத்தம் போட்டதால் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காரை மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.

ஆனால் காரை நிறுத்திவிட்டு கும்பகோணத்தை சேர்ந்த நபர் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர் இது குறித்து மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.

போலீசார் விசாரணை

சம்பவம் நடந்த பகுதி கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் இந்த பிரச்சினை அந்த போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அந்த பெண் கூறுவது உண்மையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தஞ்சையில் உள்ள அந்த ஓட்டலுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்