சேலம் அருகே கோர விபத்து: லாரிகள் நேருக்குநேர் மோதல்; 2 டிரைவர்கள் உடல் நசுங்கி பலி
சேலம் அருகே லாரிகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் உடல் நசுங்கி பலியாகினர்.
சேலம்,
சிமெண்டு லோடு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 45). தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் பழனி (40). இவர்கள் 2 பேரும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான லாரியில் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை இவர்கள், கரூரில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூருக்கு லாரியில் சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். லாரியை பழனி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த லாரி நள்ளிரவு சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாய் பக்கமுள்ள அரமனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
நேருக்குநேர் மோதல்
அப்போது எதிரே சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கோவைக்கு செருப்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரி இறக்கத்தில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மேலும் கன்டெய்னர் கழன்று முன்பக்கமாக சரிந்து சிமெண்டு லாரியின் கேபின் மீது விழுந்து நசுக்கியது.
இந்த விபத்தில் சிமெண்டு லாரி டிரைவர்கள் இளங்கோ, பழனி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வீராணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உடல்கள் மீட்பு
அப்போது சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரியின் மீது கன்டெய்னர் நசுக்கிய நிலையில் இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும், மீட்பு எந்திர வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று காலை சுமார் 8 மணி அளவில் லாரிக்குள் உடல் நசுங்கி இறந்து கிடந்த இளங்கோ, பழனி ஆகியோரை போலீசார் மீட்டனர்.
பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 லாரிகளையும் அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரானது.
டிரைவருக்கு வலைவீச்சு
இதனிடையே கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் விபத்து ஏற்பட்டதும் காயத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
லாரிகள் மோதிய கோர விபத்தில் 2 டிரைவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுதியது.