லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-09-01 21:08 GMT

திருச்சி குட்ஷெட்

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் ரெயில்வே குட்ஷெட் யார்டு அமைந்துள்ளது. இங்கு ஆந்திரா, குஜராத், மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் உரம், கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படும்.

அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பணியில் 400-க்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இங்கு லாரிகளை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் லாரிகளை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்கிறார்கள்.

இட வசதி

இதனால் அவ்வப்போது லாரிகளில் இருந்து பேட்டரிகள் திருட்டு, உதிரி பாகங்கள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆகவே லாரிகளை பாதுகாப்பாக நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். குட்ஷெட்டில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கோரிக்கை நிறைவேற்றப்படாததால், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் கடந்த 9-ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்த ரெயில்வே அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

இந்தநிலையில் 3 வாரங்களுக்கு மேல் ஆகியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்கம், மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கம், காண்ட்ராக்டர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து குட்ஷெட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர் ஜான்சனிடம் மனு அளித்தனர்.

லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளதால் சரக்கு ரெயிலில் வரும் சரக்குகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக லாரிகள் அனைத்தும் சாலைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்