ராமநத்தம் அருகேபள்ளி பஸ் மீது லாரி மோதல்30 குழந்தைகள் உயிர்தப்பினர்

ராமநத்தம் அருகே பள்ளி பஸ் மீது லாரி மோதியது.இதில் அதிர்ஷ்டவசமாக 30 குழந்தைகள் உயிர்தப்பினார்கள்.

Update: 2023-02-09 18:45 GMT


ராமநத்தம், 

வேப்பூர் அருகே மங்களூர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும், ராமநத்தம் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் மங்களூர் நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை மங்களூரை சேர்ந்த முத்துசாமி மகன் வெங்கடேசன் (34) என்பவர் ஓட்டினார்.

கல்லூர் என்கிற கிராமம் அருகே சென்ற போது, பஸ்சை நிறுத்தி அதில் குழந்தைகளை மங்களூரை சேர்ந்த கிளீனர் கொளஞ்சி(48) என்பவர் ஏற்றிக்கொண்டு இருந்தார்.

லாரி மோதியது

இந்தநிலையில், ராணிப்பேட்டையில் இருந்து அரியலூர் ராம்கோ சிமெண்டு ஆலைக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்த சுப்பன் மகன் ரவீந்திரன் (44) என்பவர் ஓட்டி சென்ற லாரி, பள்ளி பஸ்சின் பின் பகுதியில் மோதியது.

இதில் பஸ்சின் பின்பகுதி நொறுங்கி சேதமானது. அதிர்ஷ்டவசமாக அந்தபகுதியில் பள்ளிக்குழந்தைகள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதில் கொளஞ்சிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்