சேலத்தில் வடமாநில வாலிபரை கடத்திய கும்பலை பிடிக்க தனிப்படையினர் பெங்களூருவில் முகாம்

சேலத்தில் வடமாநில வாலிபரை கடத்திய கும்பலை பிடிக்க தனிப்படையினர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.

Update: 2022-06-03 20:56 GMT

சேலம், 

பெங்களூருவில் முகாம்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மூலாராம். இவர் சேலம் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஜெயராம் (வயது 22). இவர் நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வேனில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஜெயராமை கடத்தி சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணைநடத்தினர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஜெயராமை, ஏற்கனவே மூலாராம் கடையில் வேலை பார்த்த ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த கும்பல் தற்போது ஜெயராமை பெங்களூருவுக்கு கடத்தி சென்று உள்ளனர். அந்த கும்பலை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படையினர் பெங்களூருவுக்கு சென்று முகாமிட்டுள்ளனர்.

பணம் கொடுக்கல், வாங்கல்

இதற்கிடையில் ஜெயராம் எதற்காக கடத்தப்பட்டார்? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ஜெயராமை கடத்தி சென்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒரே கிராமத்தை சேர்ந்த அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஜெயராம் கடத்தப்பட்டுள்ளார். மேலும் பெங்களூருவில் உள்ள அந்த கும்பலை விரைவில் பிடித்து விடுவோம், என்றனர்.

அதே நேரத்தில் ஜெயராமை போலீசாரிடம் ஒப்படைத்து விடுவதாக அந்த கும்பலை சேர்ந்தவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த கும்பலை பற்றி நன்கு அறிந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், இதுகுறித்து போலீசாரிடம் கூறுவதற்காக சேலம் வருவதாக தெரிகிறது. அவர்களை பிடித்தால் தான் புகையிலை பொருட்கள் விற்பனை கும்பல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்