திருச்சி சிவா எம்.பி. வீடு மீது தாக்குதல்; கார் கண்ணாடி உடைப்பு
அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்பு கொடி காட்டியதால் ஆத்திரம் அடைந்த சிலர் திருச்சி சிவா எம்.பி.யின் வீடு மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், இருசக்கர வாகனங்கள் உடைத்தனர். மேலும் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்பு கொடி காட்டியதால் ஆத்திரம் அடைந்த சிலர் திருச்சி சிவா எம்.பி.யின் வீடு மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், இருசக்கர வாகனங்கள் உடைத்தனர். மேலும் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திட்ட பணிகள் தொடக்க விழா
திருச்சி மாநகராட்சி எஸ்.பி.ஐ. காலனி சண்முகா நகர், ஆழ்வார் தோப்பு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் திருச்சி சிவா எம்.பி. வீடு அமைந்துள்ள எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.
சிவா எம்.பி. வீடு சூறை
எஸ்.பி.ஐ. காலனி நிகழ்ச்சி அழைப்பிதழ் மற்றும் பேனர்களில், திருச்சி சிவா எம்.பி. பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்ட புதிய இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து விட்டு அமைச்சர் கே.என்.நேரு காரில் திரும்ப சென்றார்.
அப்போது காரில் அவரை பின்தொடர்ந்து வந்த ஆதரவாளர்கள் சிலர் திடீரென காரில் இருந்து இறங்கி சிவா எம்.பி. வீட்டின் சுற்றுச்சுவரில் இருந்த முகப்பு மின் விளக்குகளை அடித்து நொறுக்கினார்கள்.
பதற்றத்தால் போலீஸ் குவிப்பு
அதுமட்டுமின்றி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சிவா எம்.பி. வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றபோது சிவா எம்.பி. வீட்டில் இல்லை என தெரிகிறது.
போலீஸ் நிலையத்தில் மோதல்
இதற்கிடையே அமைச்சரின் காருக்கு கருப்பு கொடி காட்டிய 6 பேரை திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் பிடித்து விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க.வினர் செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.அப்போது அங்கிருந்த சிவா எம்.பி ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாகியது.
பெண் போலீசுக்கு காயம்
இதற்கிடையே சிலர் திடீரென போலீஸ் நிலையத்திற்குள் அதிரடியாக புகுந்து, அங்கு இருந்த நாற்காலிகளை எடுத்து, சிவா எம்.பி.யின் ஆதரவாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதில் பெண் போலீஸ் சாந்தி என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்தை சுற்றியும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இருதரப்பை சேர்ந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பெண் போலீஸ் சாந்தி கொடுத்த புகாரின்பேரில், அவரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துகளை சேதப்படுத்துதல் உள்பட 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களான மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் முத்துச்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், 55-வது வட்ட செயலாளர் ராமதாஸ், மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், தி.மு.க. மாவட்ட பொருளாளருமான துரைராஜ், திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் காரணமாக திருச்சி கண்டோன்மென்ட் பகுதி நேற்று பெரும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் காணப்பட்டது.