திருச்சி-காரைக்குடி டெமு ரெயில் 18-ந் தேதி முதல் இயக்கம்
புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி டெமு ரெயில் 18-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி-விருதுநகர் இடையே டெமு ரெயில் சேவை இயக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதில் விருதுநகர்-காரைக்குடி இடையே மட்டும் கடந்த நவம்பர் மாதம் முதல் சேவை தொடங்கப்பட்டது. காரைக்குடி-திருச்சி இடையே மட்டும் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. காரைக்குடி-திருச்சி இடையே மீண்டும் டெமு ரெயிலை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் இந்த ரெயில் சிறப்பு ரெயிலாக வருகிற 18-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 4.53 மணிக்கு வரும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடையும். காரைக்குடியில் இருந்து வருகிற 19-ந் தேதி முதல் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை 10.22 மணிக்கு வந்து சேரும். அதன்பிறகு அங்கிருந்து திருச்சிக்கு காலை 11.35 மணிக்கு சென்றடையும்.