துபாயில் கொடுமைக்கு ஆளாகும் திருச்சி, அரியலூர் தொழிலாளர்கள்

துபாயில் திருச்சி, அரியலூர் தொழிலாளர்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர்.

Update: 2023-02-09 19:35 GMT

துபாயில் வேலை

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 37). இவருடைய மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த பாக்கியராஜ் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டார்.

அதற்காக, திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே செயல்படும் வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த நிறுவனம் மூலம், ரூ.1 லட்சம் கொடுத்து துபாயில் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்யும் பணிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்றார். இதேபோல், புள்ளம்பாடி, திருச்சி மற்றும் அரியலூரை சேர்ந்த 12 பேர் தலா ரூ.1 லட்சம் கொடுத்து துபாய் சென்றுள்ளனர்.

சம்பளம் வழங்கவில்லை

துபாயில் பாக்கியராஜ் உள்ளிட்ட 13 பேரும் கடந்த 2 மாதங்களாக வேலை செய்து வந்த நிலையில், அதற்குரிய சம்பளத்தை அந்த நிறுவனம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அத்துடன் கடந்த 10 நாட்களாக அவர்களுக்கு அந்த நிறுவனம் உணவு கொடுக்காமலும், தங்குவதற்கு போதிய இடம் கொடுக்காமலும் கண்டெய்னரில் தங்கவைத்து கொடுமை செய்வதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பாக்கியராஜ் மோட்டார் சைக்கிளில் பணிக்கு செல்லும்போது, விபத்து ஏற்பட்டு கால்களில் காயம் அடைந்துள்ளார். அதற்கும் அந்த நிறுவனம் எவ்வித உதவியும் செய்யாமல், பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பு

இதனால் விரக்தி அடைந்த பாக்கியராஜ் உள்ளிட்ட 13 பேரும் நாங்கள் இந்தியாவுக்கே திரும்ப போகிறோம். பாஸ்போர்ட்டை கொடுங்கள் என்று அந்த நிறுவனத்திடம் கூறியுள்ளனர். அதற்கு அந்த நிறுவனத்தினர், பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்ததுடன், நீங்கள் இங்கேதான் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதுபற்றி திருச்சியில் இருந்து தங்களை துபாய்க்கு அனுப்பிய நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர்கள் கேட்டுள்ளனர். அப்போது, அங்கு அப்படித்தான் இருக்கும். அங்குதான் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச்ஆப் செய்ததாக தெரிகிறது.

கலெக்டரிடம் கோரிக்கை

இதனால், பாக்கியராஜ் உள்ளிட்ட 13 பேரும், அங்கு அவர்கள் அனுபவித்து வரும் கஷ்டங்கள், கொடுமைகள் குறித்தும், தங்களை இந்தியாவுக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கும்படியும் வீடியோ பதிவு ஒன்றை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாக்கியராஜின் மனைவி சண்முகப்பிரியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமாரை சந்தித்து, பாக்கியராஜ் உள்ளிட்ட தங்கள் உறவினர்களை இந்தியாவுக்கு மீட்டுவர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுபற்றி அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கணவரை மீட்டுத்தர வேண்டும்

இதுகுறித்து பாக்கியராஜின் மனைவி சண்முகப்பிரியா நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய கணவர் மட்டுமல்லாமல் 13 பேர் உணவு டெலிவரி செய்யும் பணிக்கு துபாய்க்கு சென்றனர். அவர்களை கண்டெய்னரில் தங்க வைத்துள்ளனர். தற்போது, அங்கு அவர்கள் உணவு, தங்குமிடம் இன்றி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதுபோல் வெளிநாட்டு வேலைக்கு என்று அழைத்து சென்று துன்புறுத்த உதவும் ஏஜென்சிகளை அரசு தடை செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்