கார் மீது மரம் சாய்ந்தது
கும்பகோணம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கார் மீது மரம் சாய்ந்தது. இதில் தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கார் மீது மரம் சாய்ந்தது. இதில் தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தம்பதி
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 30). இவருடைய மனைவி திவ்யா(26). மணி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு நேற்று காரில் வந்தார்.பின்னர் மதியம் மணி மற்றும் அவருடன் காரில் வந்தவர்கள் பேரளத்தில் இருந்து புறப்பட்டு சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர்.
கார் மீது மரம் சாய்ந்தது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பட்டீஸ்வரம், திருவிடைமருதூர், சுவாமிமலை, திருப்பனந்தாள் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.திருவிைடமருதூர் அருகே உள்ள மருதாநல்லூர் கொற்கை சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது கனமழை காரணமாக சாலையோரம் இருந்த தென்னை மரம் திடீரென முறிந்து மின்சார கம்பியை அறுத்துக்கொண்டு மணி ஓட்டிச்சென்ற கார் மீது விழுந்தது. இதில் கார் நொறுங்கி சேதம் அடைந்தது.
உயிர் தப்பினர்
அப்போது மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் காருக்குள் இருந்த தம்பதி மின்விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர்.இது குறித்து தகவலறிந்த நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் வந்த மணி-திவ்யா தம்பதியினரை மாற்று ஏற்பாடு செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-------------