தலைக்காய சிகிச்சைக்கு மதுரை செல்லும் நிலை

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக மாறிய பின்னரும் தலைக்காய சிகிச்சைக்கு மதுரை செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.

Update: 2022-07-10 16:51 GMT


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக மாறிய பின்னரும் தலைக்காய சிகிச்சைக்கு மதுரை செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.

சிகிச்சை

ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அளிக்க கூடிய வகையில் தேவை யான வசதிகளும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுஉள்ளன.

ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் தலைக்காயம் ஏற்பட்டால் அவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து மதுரைக்குதான் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். மருத்துவ கல்லூரி வந்தால் தலைக்காய சிகிச்சை உள்ளிட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளும் இங்கேயே பார்க்கலாம் என்று நம்பி இருந்த மக்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது.

கட்டுமான பணிகள்

இதுதவிர, ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பல சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாக டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

மயக்க மருந்து டாக்டர்கள் குறைவாக உள்ளதால் தினமும் 4 அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அறுவை சிகிச்சை பாதிக்கப்படுகிறது. விரைவில் கூடுதலாக மயக்க மருந்து டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆக்சிஜன் மையம்

எலும்பு அறுவை சிகிச்சை, அறுவை அரங்கு புதிய கட்டிடம் முடிவடைந்ததும் அதில் செயல்படும். இன்னும் 3 மாத காலத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு அதற்கென தனி அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பட தொடங்கும். அதற்கு தேவையான எந்திரங்கள் வந்துள்ளன. 3 மாதத்திற்குள் அனைத்து எந்திரங்களும் வந்துவிடும்.

ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் மையத்திற்கென தனியாக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு பயோ கழிப்பறை அமைக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இந்த பணி விரைவில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்