படிக்கட்டில் தொங்கியபடி பயணம்: பஸ் சக்கரத்தில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் சாவு

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 11-ம் வகுப்பு மாணவர் பஸ் சக்கரத்தி்ல் சிக்கி பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-10-29 13:20 IST

செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அருகே நல்லம்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. தச்சுத்தொழிலாளி. இவரது இளைய மகன் யுவராஜ் (வயது 16). மாம்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல நல்லம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கண்டிகை வந்த யுவராஜ் அங்கிருந்து வண்டலூர், மாம்பாக்கம் வழியாக மாமல்லபுரம் செல்லும் அரசு பஸ்சில் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.

பஸ் சிறிது தூரம் சென்றதும் மாணவர் யுவராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி யுவராஜ் பரிதாபமாக இறந்தார். தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவர் பலியான தகவல் அறிந்து மாணவனின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் கூடினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்