வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஓட்டல்கள், டீ, குளிர்பான கடைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். போர்க்கால அடிப்படையில் அறைகளை ஏலம் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-22 16:54 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஓட்டல்கள், டீ, குளிர்பான கடைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். போர்க்கால அடிப்படையில் அறைகளை ஏலம் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம்

வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 13 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது.

இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்து, பஸ் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார். பஸ் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறைவடையாததால் அங்கிருந்து சென்னை, காஞ்சீபுரம், தாம்பரம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

கடந்த 11-ந்தேதி முதல் பெங்களூரு, திருப்பதி, சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

72 அறைகள் ஏலம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு 6 அறைகள் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன.

அவற்றை தவிர மீதமுள்ள 72 அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு கடந்த மாதம் 3-ந்தேதி பொதுஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 2-ந்தேதி திடீரென நிர்வாக காரணங்களால் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஏலம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அறைகளின் வாடகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை குறைப்பதற்காக ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் சுமார் 50 நாட்களை கடந்த பின்னரும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அறைகளை ஏலம் விடுவது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஏலம் நடைபெறும் தேதியை கூட இதுவரை மாநகராட்சி நிர்வாகம் அறிவிக்கவில்லை.

பயணிகள் கடும் அவதி

ஏலம் விடாததால் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அறைகள் பயன்பாட்டிற்கு வராமல் மூடி கிடக்கின்றன. அதனால் உணவகங்கள், டீ, காபி, குளிர்பான கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக பச்சிளங் குழந்தையின் பசியாற்ற பால், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை தேடி அலைந்து வாங்கும் நிலை காணப்படுகிறது.

வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் இருந்து பஸ்சில் வேலூர் வழியாக செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் உணவகங்கள், டீக்கடைகள் இல்லாததால் பசியுடன் பயணம் செய்யும் அவலநிலை காணப்படுகிறது.

பஸ் நிலையத்தின் வெளியே சென்று உணவு சாப்பிடும் பயணிகள் சில சமயங்களில் பஸ்சை தவறவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைகிறார்கள். இரவு நேரத்தில் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் அத்தியாவசிய பொருட்களை பஸ் நிலையம் வெளியே சென்று வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

போர்க்கால அடிப்படையில்

அதேபோன்று மருந்துக்கடை, ஏ.டி.எம். மையம் உள்ளிட்ட வசதியும் இல்லை. அதனால் அவசர தேவைக்காக மருந்து, மாத்திரைகள் வாங்க மற்றும் பணம் எடுப்பதற்கு பயணிகள் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

உணவு, டீ, காபி, பிஸ்கெட், குளிர்பானம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைந்து திரியும் அவலநிலையை மாற்ற புதிய பஸ் நிலையத்தில் உள்ள அறைகளை போர்க்கால அடிப்படையில் ஏலம் விட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்