சுற்றுலா தலங்களை ரசிக்க பயணிகள் ஆர்வம்
நீலகிரி மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவுவதால், சுற்றுலா தலங்களை ரசிக்க பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவுவதால், சுற்றுலா தலங்களை ரசிக்க பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதமான காலநிலை
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் களைகட்டும்.
அதன்படி இந்த ஆண்டு முதல் சீசனையொட்டி வந்த சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகள் சார்பில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோடை விழா நடத்தப்பட்டது.
வருகை அதிகரிப்பு
கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் சுமார் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து சென்றனர். இதற்கிடையில் வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதம் முழுவதும் ஊட்டியில் மழை பெய்ததால் எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ஊட்டியில் நன்றாக வெயில் அடித்து இதமான காலநிலை நிலவுவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இன்று சனிக்கிழமை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் கார்களில் ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் லவ்டேல் சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நீண்ட தூரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
அடுத்த வாரம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதுவரை அல்லது தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.