திருப்பூர்
திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள் அமைத்தல், புதிய சாலைகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் தனியார் மற்றும் தொழில்துறையின் பங்களிப்புடன் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் காசிபாளையத்தில் இருந்து காலேஜ் ரோடு அணைப்பாளையம் வரையிலும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை மாநகரில் உள்ள பொதுமக்களுக்கு வாகனப்போக்குவரத்திற்கு மிகவும் பயன் தருபவையாக உள்ளன.
ஆற்றங்கரை சாலையை இணைக்கும் வகையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே நொய்யல் ஆற்றின் உள்ளே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது பாலத்தின் கட்டுமான பணிக்கு வசதியாக வளர்மதி பாலம் அருகே உள்ள மின்மாற்றியானது சாலையின் மறு கரைக்கு மாற்றப்படுகிறது. கிரேன் எந்திரத்தின் உதவியுடன் மின்மாற்றியை மாற்றியமைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணி நிறைவடைந்து பாலத்துடன் சாலைகள் இணைக்கப்பட்டால் மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறைய வாய்ப்பு உள்ளது.