தூத்துக்குடியில், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

தூத்துக்குடியில், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-03-07 00:15 IST

தூத்துக்குடியில், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.

திடீர் சோதனை

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறை, பால்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை, போலீஸ் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் முன்னிலையில், நேற்று காலையில் கலப்பட பால் விற்பனை தொடர்பாக திடீர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதி ஆகிய இடங்களில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பால் கேன்களை நிறுத்தி நவீன கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.

3 குழுக்கள்

இதுகுறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

பாலில் கலப்படம் செய்வது, தண்ணீர் கலப்பது குற்றம். பாலில் பவுடர் உள்ளிட்டவற்றை கலப்பது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதை கட்டுப்படுத்துவதற்காகவும், கலப்படம் இல்லாத பால் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதியில் கலப்படம் இல்லாத பால் மக்களுக்கு கிடைப்பதற்காகவும், கலப்படம் செய்யப்பட்ட பாலை பறிமுதல் செய்வதற்காகவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் பாலின் தரம் குறித்து கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்கிறார்கள்.

நடவடிக்கை தொடரும்

இந்த சோதனையின்போது தண்ணீர் மற்றும் பவுடர் கலப்படம் செய்யப்பட்ட 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று அளவீடு கருவிகளும் முறையாக இல்லை. 500 மில்லி லிட்டர் பால் என்றால் 450 மில்லி லிட்டர் தான் இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தரமான பால் சரியான அளவில் சென்றடைவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதுபோன்ற நடவடிக்கை தொடரும்.

புகார் அளிக்கலாம்

மேலும், தரமற்ற அல்லது அளவு குறைந்த பால் என்று பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்-அப் எண்ணுக்கோ அல்லது 'கால் யுவர் கலெக்டர் 86808 00900' என்ற எண்ணுக்கோ புகார் அளிக்கலாம்.

புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பால் வணிகர்கள் தரமான பாலை சரியான அளவில் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க தவறினால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அலுவலர்களும் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்