நாகர்கோவில்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. 2003-க்கு பின்பு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெறும் நாளில் அனைத்து பண பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் சங்கத் தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். செயல் தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் லியோ, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.