திருநங்கைகள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்-கலெக்டர் தகவல்

‘திருநங்கைகள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்’ என்று நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.;

Update: 2023-08-18 19:07 GMT

'திருநங்கைகள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்' என்று நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, திருநங்கைகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது திருநங்கைகள் கூறுகையில், நாங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை அடைப்பதற்கு கொட்டகை அமைத்து தர வேண்டும். நாங்கள் வசிக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொழில் தொடங்க மானிய கடன்

பின்னர் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு மத்திய மாநில அரசின் மானியத்துடன் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருநங்கைகள் வசிக்கும் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சிறு குறுதொழில் செய்ய 35 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் பெட்டிக்கடை வைப்பதற்கு 5 முதல் 6 சதவீத மானியத்துடன் ரூ.20 ஆயிரம் வழங்கி தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். திருநங்கைகள் தொழில் தொடங்குவதற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சட்டப்படி நியாயமான வாழ்வாதாரத்தை அரசு உதவியுடன் மாவட்ட நிர்வாகம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர்கள் செந்தில்குமார், ரேவதி (சிப்காட்), பயிற்சி உதவி கலெக்டர் கிஷன்குமார், மாவட்ட சமூக அலுவலர் தனலட்சுமி, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்