வாழப்பாடி அருகே கார் டிரைவர் கொலை:'மது அருந்த வற்புறுத்தி தரக்குறைவாக பேசியதால் அடித்து கொன்றேன்'கைதான திருநங்கை பரபரப்பு வாக்குமூலம்

‘மது அருந்த வரசொல்லி வற்புறுத்தியதோடு என்னை தரக்குறைவாக பேசியதால் ரீப்பர் கட்டையால் தாக்கி எட்டி உதைத்து கொன்றேன்’ என வாழப்பாடி அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான சபீர் என்ற திருநங்கை நவ்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-09-30 20:10 GMT

வாழப்பாடி

'மது அருந்த வரசொல்லி வற்புறுத்தியதோடு என்னை தரக்குறைவாக பேசியதால் ரீப்பர் கட்டையால் தாக்கி எட்டி உதைத்து கொன்றேன்' என வாழப்பாடி அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் கைதான சபீர் என்ற திருநங்கை நவ்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கார் டிரைவர் கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34), கார் டிரைவர். இவர் தனது நண்பர் கல்விக்கரசனுடன் கடந்த 28-ந் தேதி இரவு வாழப்பாடி சந்தைப்பேட்டை அய்யாகவுண்டர் தெரு பகுதியில் வசிக்கும் திருநங்கை நவ்யா (34) என்பவர் வீட்டிற்கு சென்றார். அங்கு சதீஷ் திருநங்கை நவ்யாவை உல்லாசத்திற்கு அழைத்து கட்டாயப்படுத்தியதால் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை நவ்யாவை கைது செய்து விசாரித்தனர். அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

வாழப்பாடி தாலுகா அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் பகுதியை சேர்ந்த நான் தற்போது வாழப்பாடி சந்தைப்பேட்டை அய்யாகவுண்டர்தெரு பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வருகிறேன். எனது பெயர் சபீர். சிறுவயது முதலே எனக்கு பெண்மையின் மீது அதிக நாட்டம் இருந்ததால் 18 ஆண்டுகளுக்கு முன்பாகவே மும்பையில் திருநங்கையாக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

எனது பெயரை நவ்யா என மாற்றிக்கொண்டேன். என் தோழி ஒருவருடன் தங்கி அங்கு கடைகளில் பணம் வசூல் செய்து பிழைப்பு நடத்தி வந்தேன். என் தோழி மறைவிற்கு பின் வாழப்பாடி வந்து தனியாக வீடு வாடகை எடுத்து தங்கி வந்தேன்.

மது அருந்தினோம்

அப்போது சதீஷ், கல்விக்கரசன் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழக்கம் ஆனார்கள். பல நாட்கள் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளோம். அப்படி ஒரு முறை மது அருந்தியபோது சதீஷ்க்கும் எனக்கும் வாய் தகராறு ஏற்பட்டு சதீஷ் உடன் நான் பேசுவதை நிறுத்தி விட்டேன்.

கடந்த 28-ந் தேதி இரவு ஆத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வரும்போது சதீஷ், கல்விக்கரசன் இருவரும் மது அருந்த அழைத்தார்கள். ஆனால் நான் கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு உங்க மூஞ்சிகளோடு மது அருந்த வரமாட்டேன் என்று கூறிவிட்டு எனது வீட்டிற்கு சென்றேன்.

திடீரென நள்ளிரவு ஒரு மணி அளவில் சதீஷ், கல்விக்கரசன் இருவரும் எனது வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். கல்விக்கரசன் வெளியே சென்ற நிலையில் சதீஷ் வீட்டிலிருந்த கத்தியை காட்டி மிரட்டி கண்டவர்களோடு பாலியல் தொழில் செய்யும் நீ.. (எண்ணிக்கையில் கூறினார்).

அடித்து கொன்றேன்

என்னோடு மது அருந்த வரமாட்டாயா? என தகாத வார்த்தைகளால் திட்டியதால் கோபம் அடைந்த நான் அங்கிருந்த ரீப்பர் கட்டையால் சதீஷ் மண்டையில் அடித்தேன். உயிர் தலத்தில் எட்டி உதைத்தேன். சத்தம் கேட்டு நள்ளிரவில் அக்கம் பக்கத்தினர் வந்ததால் சதீஷ், கல்விக்கரசன் இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். காலையில் சதீஷ் இறந்து போன தகவல் தெரிந்து மும்பைக்கு தப்பி ஓட முயன்றபோது போலீசாரிடம் சிக்கினேன்.

இவ்வாறு திருநங்கை நவ்யா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்