ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாற்றம்

5 ஆண்டு ஒரே ஊராட்சியில் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-07-29 19:15 GMT

இளையான்குடி,

5 ஆண்டு ஒரே ஊராட்சியில் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு கடந்த மே மாதம் சென்னை பனகல் மாளிகை முன்பு மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் 5 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தியது. அதன் விளைவாக தமிழ்நாடு அரசு ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட உள்ளது.

அதன் அடிப்படையில் ஊராட்சி செயலாளர்களின் முக்கிய கோரிக்கையான வட்டாரத்திற்குள் ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் செய்வது என்ற கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் 5 ஆண்டுகள் ஒரே ஊராட்சியில் பணியில் உள்ள ஊராட்சி செயலாளர்களை வட்டாரத்திற்குள் பணி மாறுதல் செய்திட உத்தரவு வழங்கியுள்ளார்.

கோரிக்கை

இதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் முழு மனதுடன் வரவேற்றுள்ளது. மேலும் கலெக்டரின் உத்தரவுக்கு உறுதுணையாக இருந்த திட்ட இயக்குனர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்), உதவி இயக்குனர்(தணிக்கை) ஆகியோருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மற்றும் மாவட்ட ஊராட்சி சங்க தலைவர் பாக்யராஜ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் செய்யும்பொழுது ஊராட்சி செயலாளர்களை அழைத்து கலந்தாய்வு செய்து அருகாமையில் உள்ள ஊராட்சிகளுக்கு மாறுதல் வழங்கவும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கவும் ஊராட்சி செயலாளர்களின் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்