சிக்னல் கோளாறால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக அனைத்து ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Update: 2022-09-17 18:17 GMT

அரக்கோணம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக அனைத்து ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சிக்னல் கோளாறு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே நேற்று காலை சுமார் 7 மணி அளவில் சிக்னல்கள் வேலை செய்யவில்லை. இதனால் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், பெங்களூருவுக்கு செல்லும் டபுள் டக்கர் மற்றும் சென்னை - அரக்கோணம் இடையிலான இரண்டு புறநகர் ரெயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன.

அதேபோல் மறுமார்கத்தில் சென்னை செல்லும் புறநகர் ரெயில்களான திருத்தணி - சென்னை, வேலூர் - சென்னை கடற்கரை, அரக்கோணம் - சென்னை சென்டிரல் ஆகிய புறநகர் ரெயில்களும் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டன.

ஒரு மணிநேரம் தாமதம்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்டவாள இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் சரி செய்தனர். அதன் பிறகு நடு வழியில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

ஒரு மணி நேரம் நடு வழியிலேயே ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் தனியார் நிறுவன ஊழியர்களும், அலுவலக ஊழியர்கள், பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து ரெயில்வே அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்