திருவலம்
திருவலம் அருகே சரக்கு ரெயில் பெட்டி இணைப்பு உடைந்ததால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளானார்கள்.
இணைப்பு உடைந்தது
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே நேற்று காலை சென்னை நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு ரெயிலில், பெட்டிகளை இணைக்கும் 'கப்லிங்' பகுதி திடீரென உடைந்ததால் ரெயில் பெட்டிகள் தனியாக கழன்றன.
இவ்வாறு திடீரென பெட்டிகள் கழன்றதை கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் ரெயில் திருவலம் அருகே நடுவழியில் நின்றது. உடனடியாக இதுபற்றி காட்பாடி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரெயில் வந்ததால் அந்த ரெயில் திருவலம் அருகே காலை சுமார் 8.50 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பின்னால் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சதாப்தி விரைவு ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சரக்கு ரெயிலின் கப்லிங் உடைந்த பகுதியில் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தற்காலிகமாக பழுது சரிசெய்யப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக அந்த வழித்தடத்தில் இருந்து சரக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. அதை தொடர்ந்து ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் மற்றும் சென்னை செல்லும் சதாப்தி ரெயில்கள் புறப்பட்டு சென்றன.
பயணிகள் அவதி
ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்தனர். குறிப்பாக ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயிலில் அதிகம் கல்லூரிகளுக்கு செல்வோர், பணிக்கு செல்வோர் பயணித்ததால் அவர்கள் அந்த ரெயிலில் இருந்து இறங்கி சென்று பஸ்களில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
மேலும் பழுதான சரக்கு ரெயில் முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கு கப்லிங் உடைந்த பகுதியை முழுமையாக பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.