கழிவுநீர் லாரி டிரைவர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி

தூய்மை பணியின்போது உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க கழிவுநீர் லாரி டிரைவர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-09-26 23:00 GMT

கோத்தகிரி

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சிகளில் இயக்ககம் சார்பில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து கழிவு நீரை எந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி முகாம் கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள புயல் நிவாரண கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா மற்றும் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் சென்னையைச் சேர்ந்த தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை எவ்வாறு பாதுகாப்பாக எந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்வது என்பது குறித்து விளக்கி பேசினார். இந்த கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 250 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தூய்மை பணியின் போது உயிரிழப்புக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உபயோகப்படுத்த வேண்டிய நவீன எந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் போது விஷ வாயுக்களால் ஏற்படும் அபாயங்கள், பணிச்சுழலில் அபாயங்கள், எந்திர ரீதியான அபாயங்கள், சாத்தியமான அபாயங்கள், தொழில் ரீதியான அபாயங்கள் உள்ளிட்டவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், பணியின் போது ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த பயிற்சி முகாமில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல பகுதிகளை சேர்ந்த கழிவுநீர் எந்திர உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்