மதுரை-போடி அகலப்பாதையில் ரெயில் வேக சோதனை

மதுரை-போடி அகலப்பாதையில் ரெயில் வேக சோதனை செய்யப்பட்டது

Update: 2023-06-14 20:51 GMT


மதுரை-போடி இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி நடந்தது.

இதில், மதுரை-தேனி இடையே மட்டும் அகலப்பாதை பணி முடிந்து மதுரையில் இருந்து காலையில் ஒரு ரெயில், தேனியில் இருந்து மாலை ஒரு ரெயில் என இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தேனி-போடி அகலப்பாதை பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இந்த பாதையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. ரெயில் நீட்டிப்பு அறிமுக விழா இன்று (வியாழக்கிழமை) நடக்க இருக்கிறது. இதற்கிடையே, மதுரை-போடி இடையே புதிதாக போடப்பட்டுள்ள அகலப்பாதையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதற்கான ஆய்வு ரெயில் பெட்டிகளுடன், ஓ.எம்.எஸ். பெட்டியும் இணைக்கப்பட்டு தண்டவாளத்தின் உறுதித்தன்மை மற்றும் போக்குவரத்து குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக இந்த பாதையில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆய்வு நடந்தது. அத்துடன், அதிகாரிகள் தனி ரெயிலில் இந்த பாதையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல, இந்த ஆய்வு ரெயில் மதுரை-விருதுநகர் இடையே புதிதாக போடப்பட்ட இரட்டை அகலப்பாதையில் நேற்று மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரையிலும், விருதுநகர்-மதுரை ரெயில் நிலையம் இடையே மதியம் 2.30 மணி முதல் மாலை 3 மணி வரையும் இயக்கி சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்