மதுரை-தேனி ரெயில் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு; பயணிகளுக்கு மரக்கன்று, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மதுரை-தேனி ரெயில் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பயணிகளுக்கு மரக்கன்று, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Update: 2023-05-26 21:00 GMT

மதுரை-போடி இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டு, ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 83 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த ரெயில், கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு அகல ரெயில்பாதை பணிகள் மதுரையில் இருந்து தேனி வரை கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 26-ந்தேதி மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயில் சேவையை சென்னையில் நடந்த விழாவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் சேவை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் மதுரை-தேனி இடையே ரெயில் சேவை தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் தேனி ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதேபோல் ரெயில் நிலைய வளாகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தேனி ரெயில் நிலைய அதிகாரி கார்த்திகேயன், ரெயில் பயணிகளுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்