ஜோலார்பேட்டை - ஓசூர் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை - ஓசூர் ரெயில் திட்டத்தை மத்திய ரெயில்வே துறை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி:
கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு முடிவுகளை விளக்கும் கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரசார இயக்கம்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விலைவாசி உயர்வு தாங்க முடியாமல் உள்ளது. வரலாறு காணாத வேலை இல்லாத திண்டாட்டம். சமையல் எரிவாயு, டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே 8 ஆண்டுகால மோடி அரசை கண்டித்து, எங்கள் கட்சி சார்பில் ஒரு பிரசார இயக்கத்தை தமிழகம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறாம். இந்தியாவின் இருள் அகற்றுவோம் என்கிற அந்த இயக்கத்தை நடத்தி வருகிறோம். வருகிற 5-ந் தேதி இந்த இயக்கத்தின் சார்பில் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். பொதுக்குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் கலந்து கொள்கிறார்.
தமிழக அரசு மின்சார சட்டம் 2022-ஐ மக்களவை நிலைக்குழுவுக்கு அனுப்பி உள்ளது. இச்சட்டம் மிக, மிக ஆபத்தானது. இத்திட்டம் மூலம் மின்சாரம் தனியாரின் கைக்கு சென்றுவிடும். இதனால் தமிழகத்தில் 22 லட்சம் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறி போகும் ஆபத்து ஏற்படுகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது. அனைத்து மின்சார சலுகையும் ரத்தாகும். எனவே இந்த மின்சார சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது.
தமிழக அரசு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழகத்தில், பாதி நிலங்கள் பாசனம் இன்றி தரிசாகத்தான் உள்ளது. எனவே தமிழக அரசு அதற்கான திட்டங்களை உருவாக்குவது, அணை கட்டுவது, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
ரெயில்வே திட்டம்
ஜோலார்பேட்டை - ஓசூர் ரெயில் திட்டத்தை மத்திய ரெயில்வே துறை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கெலவரப்பள்ளி அணைக்கு வந்து கொண்டிருக்கும் உபரி நீரை ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டைக்கு நீரேற்று திட்டம் மூலம் தண்ணீர் நிரப்ப அரசு சிறப்பு திட்டம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆஞ்சலா மேரி, சாம்ராஜ், ஜெயராமன், பிரகாஷ், நஞ்சுண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.