சரக்கு வேன் குறுக்கே வந்ததால் விபரீதம்; தடுப்புச்சுவரில் மோதி மாநகர பஸ் விபத்து - டிரைவரின் சாமர்த்தியத்தால் 50 பயணிகள் உயிர் தப்பினர்

திருவொற்றியூரின் சரக்கு வேன் குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறிய மாநகர பஸ், தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-07-12 07:32 GMT

சென்னை பாரிமுனையில் இருந்து தடம் எண்-4 கொண்ட மாநகர பஸ் நேற்று மாலை எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் தனசேகர் (வயது 41) என்பவர் ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பஸ் எண்ணூர் விரைவு சாலை திருவொற்றியூர் கோமாதா நகர் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் ஒன்று பஸ் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றது. அப்போது சரக்கு வாகனம் திடீரென சாலையை கடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர், பஸ் அதன் மீது மோதாமல் இருக்க சாமர்த்தியமாக பிரேக் அடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நிலைத்தடுமாறி சாலையில் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் கண்ணாடி உடைந்ததில் டிரைவர் தனசேகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த பஸ்சில் பயணம் செய்த சித்ரா என்ற பெண்ணுக்கும், 17 வயது பள்ளி மாணவி ஆகிய 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவர்கள் 3 பேரையும் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, பஸ்சில் இருந்த பயணிகளை மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் அரிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநகர பஸ் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்